சித்திரைப் புத்தாண்டு - நந்தன வருடப் பிறப்பு - 13.04.2012

"நந்தன" புத்தாண்டே வருக வருக, துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்க அருள் தருக

நந்தன வருஷம் 13.04.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5:47 மணிக்கு உத்தராடம் - 1பாதத்தில் கன்னி இலக்கினத்தில் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் முன்னிரவு 7:20 மணிக்கு உத்தராடம் - 2 பாததில் துலாம் இராசியில் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் விஷூபுண்ணிய காலம் பகல் 1:45 முதல் இரவு 9:45 வரை அமைவதாக கணிக்கின்றது.

பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் 13.04.2012 வெள்ளிக்கிழமை “நந்தன” என்னும் பெயருடன் தமிழ் புதுவருடம் பிறக்கின்றது. இத்தினத்தைமே பௌத்த மதத்தினரும் தமது புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது சைவ மக்களின் மராபாகும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, பொங்கல், பலகாரங்கள் பரிமாறி அனைவரும் மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கமாகும்.

புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில் மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்து அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

மருத்துநீர் என்பது;
தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

இந்த புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும்.
இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.

அதன் காரணமாக இப் புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், தாவடி விநாயகர் ஆலயம், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் புத்தாண்டு தினத்தில் தேர்த்திரு விழா நடைபெறுவது வழக்கம். மருதடி விநாயகர் ஆலயம் தற்போழுது புனர் நிர்மாணம் செய்யப்பெற்று வருவதனால் அலங்காரத் திருவிழா நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இத் தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் மட்டுமன்றி எல்லா ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறும். இத்தினத்தில் அனேகமான ஆலயங்களில் பிரதம குரு கைவிசேஷம் வழங்கும் வழக்கமும் வழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

வருடப்பிறப்புக் கருமங்கள்:
புத்தாடை தரிசனம்
ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும்.

பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு
வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.

நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம். சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள். காலை, நடுப்பகல், பிற்பகல் என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும் இடமாயிருக்கும் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள், அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்.

இளவேனில் (வசந்த ருது), ருதுவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது), முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது). ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். காயத்திரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி ஆகிய ஸப்த சந்தஸ்ஸுகள் ஏழு குதிரைகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன, துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. சூரியனே `தேவயான மார்க்கம்’ அது அர்ச்சிராதி மார்க்கம் எனவும் சொல்லப்படும். புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும்.

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

வகை: